ரொட்டி
“என் பொன்னு கொஞ்சம் லூசு தான்யா.”, வெங்காயத்தை சீராக நறுக்கியவாறே சொன்னார் சந்துரு.
“அட என்னப்பா, அமேரிக்கா எல்லாம் போய் பெரிய படிப்பு படிசுட்டு திருப்பி வரா. அவளப் போய் இப்படி பேசற.”, மேசையில் இருந்த பேனாவை எடுத்து கையில் சுழற்றினார் சேகர்.
“அந்த பேனாவ வக்கறியா? அது என்னுது.”, கொஞ்சம் கறாராய் சொன்னார் சந்துரு. அடர்த்தியான நறை நிறைந்த முடியின் கீழ் புருவங்கள் சுருங்கின.
“அம்பது வருஷம் ஃப்ரண்டு, இன்னும் உன் பேனாவ தொட்டா கோவமா?”, சிரித்தார் சேகர். “சரி, அவ்வளவு நல்ல பொன்னு மீனாட்சி. அவள ஏண்டா லூசுங்கர?”
“அதெல்லாம் அப்படித் தான்.” நறுக்கிய வெங்காயத்தை கத்தியைக் கொண்டே பலகையின் ஒரு மூலைக்குத் தள்ளினார் சந்துரு. மரப்பலகையின் மேல் ஒரு சிறு பனிமலை போல் வெங்காயம் அமர்ந்தது. “இப்போ நீயே சொல்லு. தமிழ்ப் பொன்னு, அதுவும் தஞ்சாவூர்ல புறந்து வளந்த பொன்னு. என்ன சாபிடுவா?” அடுத்து பூண்டை ஆவேசத்துடன் உரித்தார். “இல்ல என்ன சாபிடுவா? ஒரு சாம்பார், ஒரு ரசம், ஒரு புளிக்கொழம்பு, ஒரு கறி.” கத்தியின் முனை பலகையை விட்டு எழும்பாமல் உரித்த பூண்டை நறுக்கினார்.
“அட இவ்வளோ தானா? ஆமாம்யா, அவளுக்கு ஃப்ரட்டு தான் பிடிக்கும். இப்போ அதுக்கென்ன?”
“அதுக்கென்னவா? இவ அம்மா போனப்புரம் இவளுக்காக நான் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து சுடசுட இட்லி, தோசை, பொங்கல்…இந்த பொங்கல் இருக்குல்லியா, அதுல முந்திரி எல்லாம் பொட்டு அப்படியே ஆவி பறக்க தட்டுல வச்சா இவ போய் செட்டியார் கடைல ரொட்டி வாங்கிட்டு வந்து அதுல ஜாம் தடவி சாபிடுவா. சரி கழுத, காத்தால தான் இப்படின்னா, சாயந்திரம் வந்தா போர்ன்வீட்டால தொட்டுக்க ரொட்டி. ராத்திரி சுட்ட ரொட்டில வெறும் வெங்காயமும் தக்காளியும் அமுக்கி சாபிட வேண்டியது.”
“அட விடுப்பா, எதோ சின்ன புள்ளைல தின்னத போய் சொல்லிகிட்டு.”
“சின்ன புள்ளையா? இவள கோயமுத்தூருக்கு காலேஜுக்கு அனுப்பி வச்சேன்ல? அப்பவாச்சும் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் அப்பா, உன் வத்தகொழம்பு சாப்பிடனும் போல இருக்குன்னு கேப்பாளான்னு பாத்தேன்”, கத்தியின் கைப்பிடி முனையில் ஒவ்வொன்றாக மிளகை இடித்தவாறே பெறுமூச்சு விட்டார் சந்துரு. “அங்க போய் பிஜா பர்கர்ன்னும் இன்னும் கண்ட கண்ட ரொட்டியெல்லாம் தின்னுட்டு வந்து எனக்கும் வாங்கித் தறேன்னு உயிர எடுத்தான்னா பாத்துக்கோ!”
“அது பிஜா இல்ல சந்துரு pizza”, என்றார் சேகர்.
“ஓங்கி அடிச்சேனா பாத்துக்கோ” என்று கையை ஓங்கினார் சந்துரு
பயந்தாற் போல் நடித்தார் சேகர். பின் இருவரும் சிரித்தனர்.
“என்னமோ சேகர், தமிழ்நாட்டுல, அதுவும் தஞ்சாவூர்ல வளந்த பொன்னு இப்படி ரொட்டிப் பைத்தியம் புடிச்சு அலயுதே. என்ன சொல்றது போ. அது லூசு தான் யா.”
“அப்படியா? அந்த லூசு வருதுன்னு புதுசா அவென் வாங்கி அதுல விதவிதமா ரொட்டி சுட்டு வச்சுருக்குற நீ என்னவாம்?” சிரித்தார் சேகர்.
“வேற என்ன பண்ண சொல்லுற? ரெண்டு வருஷம் கழிச்சு வற்றா. வீட்டுல என் கையால சாப்பிடறத விட்டுட்டு இங்க வந்து அப்பா பக்கத்து தெருவுல பர்கர் சுடறான் எதுத்த தெருவுல ஸாண்ட்விச்சு செய்யறான் சாப்பிட போலாம் வான்னு ஆரம்பிச்சா எனக்கு கோவம் வந்துரும். எதுக்கு வீண் சண்ட? கழுத அதுக்கு என்ன புடிக்குதோ அத வீட்டுலயே தின்னுட்டு போகட்டும்.” சிரித்தவாறே சமையலறையில் சென்று அவெனை ஆன் செய்தார் சந்துரு.
— —
வீட்டுக்குள் வந்ததுமே வலது செப்பல் ஒரு பக்கம் இடது செப்பல் ஒரு பக்கம் கழட்டி எரிந்தாள் மீனாட்சி.
“ஏன்ப்பா ஒரு ஏஸி வாங்கி மாட்டலாம் இல்ல வீட்டுல? ஒரே புழுக்கம்.” அப்பாவின் மேசையில் கால்களைப் போட்டு, பேனாவை உதட்டில் கடித்தாள்.
தன் பற்களை சற்றே கடித்தவாறே பதில் சொனார் சந்துரு.
“அமா, நீங்க மகாராணீ ஆடிக்கொரு தரம் அமாவசைக்கொரு தரம் வருவீங்க. உங்களுக்காக நான் வருஷம் பூரா ஏசி பில்ல கட்டனுமாக்கும்.”
“லீவு கிடைக்கலைப்பா. நான் என்ன பன்னட்டும்?” பேனாவை வைத்து விட்டு அப்பாவைத் தழுவினாள்.
“ஹ்ம்ம்…” சிரிதார் சந்துரு “இப்படிப் பேசியே அப்பாவ கவுத்துடு. சரி சரி, போய் மூஞ்சி கழுவிட்டு வா. சாப்பிடலாம்.”, சந்துரு எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார்.
கைகளை உயர்த்தி களைப்பைக் களைந்தாள் மீனாட்சி.
“Ok. அப்பா, அமேரிக்கால ஸாண்ட்விச்சு, பர்கர், பீஜ்ஜான்னு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. நீ வப்பியே, நல்லா புளிப்பா, காரமா ஒரு வத்தகொழம்பு அததானே வச்சுருக்கே?”
அப்பொழுது சமையலறையில் இருந்து வந்த “டமால்” என்ற சத்ததிற்கும் ராத்திரி சாப்பிட்ட வத்தகொழம்பு வைக்கப்பட்டிருந்த இலுப்பச்சட்டியில் விழுந்திருந்த இடுக்கிற்கும் என்ன தொடர்பு என்பது மீனாட்சிக்கு தெரியவேயில்லை.