யார் எங்கள் சாமி?
யார் இந்த சாமி?
கோவிலிலே கருவறையில்
கல்லினிலே கட்டி வைத்து
காலமெல்லாம் பூட்டி வைத்து
பூவிழந்து மணமிழந்த
நார் இந்த சாமி! மழை
அடித்து காய்ந்து போன
சேறிந்த சாமி!
தேன் எங்கள் சாமி!
கதையினிலே கவிதையிலே
குயவன் வேடன் பாட்டினிலே
இடையன் குடித்த கள்ளினிலே
சொட்டு சொட்டாய் சேகரித்த
தேன் எங்கள் சாமி! நொடியில் நூறு
காட்சி காட்டும்
வான் எங்கள் சாமி!
யார் இந்த சாமி?
கால நேரம் கிரகம்
சொல்லும் நியதிக்கெல்லாம் கட்டுபட்டு
மந்திரத்தில் மயங்கி நின்ற
பாவை இந்த சாமி! இழுக்கும்
நூலின் கீழே ஆடும்
பொம்மை இந்த சாமி!
தீ எங்கள் சாமி!
நாடு நகரம் காடு வயல்
வரம்பு மீறி வாய் பிளந்து
நேற்று இன்று நாளை என்றும்
வெறி பிடித்து வெந்து வரும் காட்டுத்
தீ எங்கள் சாமி! வெந்த தீயில்
பிணத்தை மொய்க்கும்
ஈ எங்கள் சாமி!
யார் இந்த சாமி?
நம்பினோர்க்கு நன்மை செய்து
மற்றவற்குத் தீமை தந்து
நாடகமாய் நீதி செய்யும்
பொய் இந்த சாமி! கொடுக்கல்
வாங்கல் வணிகம் செய்யும்
பொய் இந்த சாமி!
தேள் எங்கள் சாமி!
கோவத்திலே சிரிப்பினிலே
அழுகையிலே ஆசையிலே
ஆட்டி வைக்கும் விஷத்தைக் கக்கும்
நோய் எங்கள் சாமி! வானத்தையே
வெட்டி வீழ்த்தும் மின்னல்
வாள் எங்கள் சாமி!
யார் இந்த சாமி?
ஆசை வென்று அறிவில் சேர்ந்து
தவத்தைப் பேணி தருமம் செய்து
அறத்தைக் காத்த அரியவர்க்கே
அருளைத் தரும் கோன் இந்த சாமி! விதித்த
விதியில் வாழ்ந்து மாயும் வெறும்
வீண் இந்த சாமி!
ஆள் எங்கள் சாமி!
அழைத்த போது ஓடி வந்து
சோறு தண்ணீ சோகம் சுகம்
வீடு வாசல் பிள்ளை எல்லாம்
பங்கு போட்டு சண்டை போடும்
ஆள் எங்கள் சாமி! கூட நின்று
கூத்தடிக்கும்
நாம் எங்கள் சாமி!